திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் வெட்டிப்படுகொலை-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை
நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கொலை விவகாரம் தொடர்பாக நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடேச.தமிழார்வன் (50). இவர் நேற்று முன்தினம் (09.11.2021) மாலை நீடாமங்கலம் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த மர்ம கும்பல் ஓன்று, அவரை அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிவிட்டது. இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த நடேச.தமிழார்வன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த அவரது ஆதரவாளர்கள், கொலைச் சம்பவத்தை கண்டித்து நீடாமங்கலம் கடை வீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழார்வனின் உடலை போலீசிடம் ஒப்படைக்க மறுத்தனர். இதனால் பெரும் பரப்பு ஏற்பட்டது. நிகழ்விடத்தில் திருவாரூர் எஸ்பி விஜயகுமார் தலைமையேற்று நேரடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். நீடமங்கலத்தில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நடேச.தமிழார்வன், நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தை சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்தார். நீடாமங்கலம் பகுதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக போரடியவர். இவர் மீது அரசியல் வழக்குகள் தவிர பல்வேறு அடிதடி வழக்குகளும் இருந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நிலையிலேயே தப்பியோடினார். இது தொடர்பான வழக்கையும் எதிர்கொண்டார்.
இந்த வழக்கை முறையாக விசாரணை நடத்தவில்லை என நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த கொலை சம்பவத்தில் 4 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.