சந்திரயான்3: இந்தியாவின் நிலவுப்பயண வரலாற்றில் இடம் பிடித்த தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேல்! யார் இவர்?

சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்படும் நிகழ்வை நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. சரித்திரத்தில் முத்திரை பதிக்கும் இந்தச் சாதனையில், தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்து வேலுவும் பங்களித்துப் பெருமை சேர்த்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பழனிவேலுவின் மகன்தான் வீரமுத்துவேல். இவருக்கு விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என்ற தாகம் சிறு வயதிலேயே இருந்தது. தொழிற்கல்வி முடித்துவிட்டு, தாம்பரத்தில் தனியார் கல்லூரியிலும், சென்னை ஐஐடியிலும் தொழிற்கல்வி, பொறியியல், முதுநிலை ஆராய்ச்சி என அடுத்தடுத்து தேடித்தேடி படித்தார் வீரமுத்துவேல்.

சென்னை ஐஐடியின் ஏரோ-ஸ்பேஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவருக்கு, 1989-ஆம் ஆண்டில் இஸ்ரோவின் விஞ்ஞானியாகும் வாய்ப்பு கிடைத்தது. டிப்ளமோ படிப்பிலிருந்து கற்றதால் நுணுக்கமான சில வன்பொருள் வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யும் இயல்பு, வீரமுத்து வேலுக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்தது.

veeramuthu vel
veeramuthu velpt desk

2016-ஆம் ஆண்டில், விண்கலத்தின் மின்னணுத் தொகுப்பில் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து வீரமுத்துவேல் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை, பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் சோதிக்கப்பட்டது. அப்போது அந்தத் தொழில்நுட்பம், இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டது. ஏனெனில், நிலவில் லேண்டரை தரை இறக்குவதற்கும் ரோவரை இயக்குவதற்கும் இந்தத் தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும். பாராட்டுகளைப் பெற்ற வீரமுத்து வேலின் சோதனை முயற்சி,அவரை சந்திரயான்-3 திட்ட இயக்குநராகவும் மாற்றியது.

இஸ்ரோவில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளிலும், திட்டங்களிலும் பணியாற்றிய வீரமுத்துவேல், 2019-ஆம் வருடம் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். விஞ்ஞானி வீரமுத்து வேலுக்கு கீழே 29 துணை இயக்குநர்களும், அவர்களுக்குக் கீழே எண்ணற்ற விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இணைந்து உருவாக்கியதுதான் சந்திரயான்-3 திட்டம். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையான ஆய்வுகள், பரிசோதனைகளுக்குப் பிறகு சந்திரயான் விண்கலம் முழு வடிவத்தை அடைந்துள்ளது.

veeramuthu vel
veeramuthu velpt desk

மெய்நிகர் தொழில்நுட்பம், மென்பொருள் - வன்பொருள் குறித்தான அனைத்துத் துறைகளிலும் ஈடுபாடுகொண்ட வீரமுத்துவேல், கடந்த இரண்டு ஆண்டு காலத்தை ஆய்வகத்திலேயே செலவிட்டுள்ளார். ஏற்கெனவே சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய திட்டங்களிலும் தமிழர்களே திட்ட இயக்குநராக இருந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சந்திரயான்-3 திட்டத்திலும் இந்தியாவின் நிலவுப்பயண வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் வீரமுத்துவேல் என்ற தமிழர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com