ஆந்திராவில் இருந்து மாநிலங்களவை எம்பி ஆகிறார் அண்ணாமலை.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
செய்தியாளர்: R.ராஜிவ்
தமிழக பாஜக மாநிலத் தலைவராக சமீபத்தில் நயினார் நாகேந்திரன் நியமனம் செய்யப்பட்ட நிலையில், தலைவராக செயல்பட்ட அண்ணாமலைக்கு பாஜக பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பெரும் பொறுப்பை வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர்களால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை விரைவில் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியானது.
குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் இருந்து அண்ணாமலை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு திருப்பதி வெங்கடாசலபதி சிலையை பரிசாக வழங்கினார். இந்த சந்திப்பில், நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தல் மற்றும் முக்கிய அரசியல் விவாதங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் கூறுகிறது.
இருப்பினும், அண்ணாமலை ஆந்திர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பி ஆக தேர்வு செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளதாகவே கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
ஆந்திராவில் இருந்து வேணும்பாகா விஜயசாய் ரெட்டி தன்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அந்த இடத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 29 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். மே 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.