காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீனவர்கள் மன்னார் வளைகுடா, வடதமிழக ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கரூரில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.