
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, நெல்லை, சேலம், தேனி, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூர், புதுச்சேரியில் தலா 19 சென்டி மீட்டரும், நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு, கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் தலா 10 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.