தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 8-ஆம் தேதி கேரளா மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, வாயு புயல் காரணமாக வடக்கு நோக்கி நகர்வது தடை பட்டது. இதனாலேயே தமிழகத்தில் அனல் காற்று வீசியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது ராயல்சீமா மற்றும் ஆந்திர கடற்கரைப் பகுதிகளுக்கு தென்மேற்கு பருவமழை நகர்ந்ததால் தமிழகத்தில் படிப்படியாக வெப்பநிலை குறையும் என கூறப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜூன் 1-ஆம் தேதி முதல் இதுவரையிலான நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை 37 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

