அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஜா புயலுக்கு பிறகு தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் அது வலுகுறைந்து தமிழகத்தின் உள் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நீடித்தது. இதன் காரணமாக டெல்டா பகுதிகளிலும் சில இடங்களில் கனமழை பெய்தது. புறநகரைப் பொறுத்தவரை இடைவெளிவிட்டு சிலமுறை மழை பெய்தது.
இந்நிலையில் தமிழக கடலில் கிழக்குத்திசை காற்று வலுப்பெற்றுள்ளதால் அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலோரப் பகுதிகளில் சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.