ஆறு மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..?
அனைத்து லாரிகளுக்கும் பணி ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தி, தென்னிந்திய எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். வேலை நிறுத்தம் நீடிக்கும்பட்சத்தில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயச் சூழல் உண்டாகும்.
எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் கீழ் ஐயாயிரத்து 500 டேங்கர் லாரிகள் செயல்படுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை ஒப்பந்தம் அடிப்படையில் இச்சங்கத்தின் லாரிகளுக்குப் பணிகள் வழங்கி வருகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தில், மாநில பதிவெண் கொண்ட லாரிகளுக்கு முன்னுரிமை அளித்ததால், 700 லாரிகள் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் மீதமுள்ள லாரிகளுக்கும் பணி ஒப்பந்தம் வழங்க வலியுறுத்தி எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இப்போராட்டம் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயச் சூழல் உண்டாகும்.
இதனிடையே இதுகுறித்து தென்மண்டல எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் கூறும்போது, “லோடு இறக்கும் இடங்களில் எங்களது வாகனங்கள் கேஸ் இறக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடும். ஆனால் லோடு ஏற்றும் இடங்களில் எங்களது வாகனம் லோடு ஏற்றாது. இதனால் பொதுமக்களுக்கு குறைந்த 15 நாட்கள் கேஸ் தட்டுப்பாடு ஏற்படாது” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, வேலைநிறுத்தத்திற்கு தடைக் கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.