ஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து சான்றிதழ்
மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவை தொடர்ந்து தூத்துக்குடியில் ஆணுக்கும் திருநங்கைக்குமான திருமணத்தை அங்கீகரித்து பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சங்கர பேரி பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீஜா என்ற திருநங்கையை காதலித்து கடந்த ஆண்டு தூத்துக்குடி சிவன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து இவர்களின் திருமணத்தை சட்டப்படி பதிவு செய்வதற்காக தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர். அப்பொழுது தமிழக சட்ட விதிமுறைகளின்படி அருண்குமார்- ஸ்ரீஜாவின் திருமணத்தை பதிவு செய்ய இயலாது எனவும், ஆண் திருநங்கையின் திருமணத்தை பதிவு செய்வதற்கு வழிவகை இல்லாததால் உங்களுடைய திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை என சார்பதிவாளர் கூறியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அவர் பலகட்டங்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இடத்தில் புகார் அளித்தானர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தங்களின் திருமணத்தை பதிவு செய்து திருமணப் பதிவு சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு கூறியது. அதில் அருண்குமார் ஸ்ரீஜா தம்பதியினரின் திருமணத்தை பதிவு செய்து அவர்களுக்கு திருமணப் பதிவு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும் கலப்பு திருமணத்திற்கு தமிழக அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் அருண்குமார் -ஸ்ரீஜா தம்பதிகள் பெற தகுதியானவர்கள் என்று கூறியும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து இன்று அருண்குமார்- ஸ்ரீஜா தம்பதியினர் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து தங்களின் திருமணத்தை இந்து சட்ட விதிமுறைகளின்படி பதிவு செய்ய விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு திருமணப் பதிவு சான்று வழங்குவதற்கான ரசீது வழங்கப்பட்டது.
தமிழகத்திலேயே முதல்முறையாக ஆண் - திருநங்கையின் திருமணத்தை அரசு அங்கீகரித்து திருமணப் பதிவு சான்றிதழ் வழங்குவது இதுவே முதன்முறை. ஆகவே இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அவர்கள் எனக் கூறினார்.