ஏர்செல் சேவை முடக்கப்பட்டது எதனால்?: அதிகாரி விளக்கம்
ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை அதிகாரி சங்கர நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியா முழுக்க ஏர்செல் நெட்வொர்க் முடங்கிப் போயுள்ளது. திடீரென சேவை முடக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். கேஸ் இணைப்பு, முக்கிய வியாபாரங்கள் என அனைத்துக்கும் ஏர்செல்லையே பயன்படுத்துவதால், எந்த வேலையும் செய்ய முடியாமல் தவிப்பதாக பலர் கொதிக்கின்றனர். வேறு நிறுவனத்துக்கும் மாற முடியாததும் சிக்கலாக உள்ளது. ஏர்செல் நிறுவனங்களுக்கு முன்பு வாடிக்கையாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருவதால், அதன் ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏர்செல் சேவை 3 நாட்களில் சீராகும் என்று ஏர்செல் நிறுவனம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை அதிகாரி சங்கர நாராயணன் கூறுகையில், “ஏர்செல் நிறுவனத்தின் ஒன்றரைக் கோடி வாடிக்கையாளரின் சேவை முடக்கப்பட்டுள்ளது. டவர் குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட சட்டசிக்கல், நிதி நெருக்கடி காரணமாக ஏர்செல் சேவை முடக்கம் ஆகியுள்ளது. இது மிகவும் வருந்தக்கூடிய விஷயம். எங்களுக்குள் இருக்கும் பிரச்னை மக்களை பாதிப்பது மனவருத்தத்தை அளிக்கிறது. டவர் நிறுவனம் முன்னறிவிப்பின்றி சேவையை நிறுத்தியதால் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க முடியவில்லை” என்றார்.
மேலும், “குத்தகை நிறுவனத்துடன் உச்சகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களில் சேவை சரியாகும். சேவை சரியாகும் வரை மாற்று பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடோபோன் போன்ற மாற்று நிறுவனங்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.