விழிப்புணர்வின் கற்றல் மேடை.. புதுயுகம் டிவியில் சதமடித்த ’சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சி..
நமது 'புதுயுகம்' தொலைக்காட்சியில் 100வது நிகழ்ச்சிகளுடன் நீதிப் பயணத்தில் ஒளியேந்தி சென்றுகொண்டிருக்கிறது 'சட்டம் ஒரு வகுப்பறை' நிகழ்ச்சி.
நமது 'புதுயுகம்' தொலைக்காட்சியில் 100வது நிகழ்ச்சிகளுடன் நீதிப் பயணத்தில் ஒளியேந்தி சென்றுகொண்டிருக்கிறது 'சட்டம் ஒரு வகுப்பறை' நிகழ்ச்சி. சட்டம் என்பது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த ஒன்று. ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இன்னும் முழுமையாகச் சென்றடயவில்லை. இந்த குறையை நீக்குவதே ’சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். இந்த நிகழ்ச்சி ஒரு நேரலை நிகழ்ச்சி என்பதால், பார்வையாளர்கள் நேரடியாக தொலைபேசி மூலம் இணைந்து தங்கள் சந்தேகங்களைக் கேட்டு உடனடியாக சட்ட நிபுணர்களிடமிருந்து விளக்கம் பெற முடிகிறது. இது, ‘சட்டம் ஒரு வகுப்பறை’யின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். மக்களுடன் நிகழ்ச்சியின் நேரடி உரையாடல், அவர்களின் பிரச்னைகள் சட்டரீதியாக எவ்வாறு தீர்க்கப்படலாம் என்பதற்கான நம்பிக்கையை உருவாக்குகிறது. இதன்மூலம் ஒரு கற்றல் மேடையாக இந்த நேரலை நிகழ்ச்சி மாறியுள்ளது..
திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, குடும்பம், சொத்து, காப்பீடு நலன், நுகர்வோர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, வேலைத்தள உரிமைகள், காவல் துறை சேவைகள், அரசு சேவைகள், மோசடி, சைபர் குற்றங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மக்களுக்குத் தேவையான சட்ட விளக்கங்களை வழங்குகிறது. அனுபவமுள்ள உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு ஒவ்வொரு தலைப்பையும் தெளிவாக விளக்குகின்றனர். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்ட நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.
ஒவ்வொரு பகுதியிலும் மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை எடுத்துக்கொண்டு, அதில் சட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரியவைக்கிறது. இது வெறும் சட்ட விளக்கம் அல்ல. மாறாக, வாழ்க்கை வழிகாட்டி என்பதை விளக்குகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எங்கே, எப்படி புகார் செய்யலாம்?, காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எப்படி?, பெண்களை பாதுகாக்கும் சட்ட உரிமைகள் என்ன?, இத்தகைய எளிய கேள்விகளுக்கு மக்களின் மொழியில் மிக எளிமையாக பதிலளிக்கிறது, மக்களின் நிஜ அனுபவங்களின் மூலம் சட்டம் எப்படி அவர்களின் பக்கத்தில் நிற்கிறது என்பதையும் நிகழ்ச்சி வெளிப்படுத்துகிறது. தொகுப்பாளர்களான நிலா மற்றும் யாழினி திருமுகம் ஆகிய இருவரும் நிகழ்ச்சியை உயிரோட்டத்துடன் நெறிப்படுத்துகின்றனர்.
’புதுயுகம்’ தொலைக்காட்சி எப்போதும் சமூகப் பொறுப்புடன் செயல்படும் ஊடகம் என்ற அடையாளத்தைப் பெற்றுள்ளது. அதில், ‘சட்டம் ஒரு வகுப்பறை’ ஒரு மைல்கல். இது சட்ட விழிப்புணர்வை மக்களுக்குக் கொண்டுவரும் கல்வி இயக்கமாக திகழ்கிறது. ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொருவர் மனதிலும் சட்டத்தின் வெளிச்சம் பரவ வேண்டும் என்ற இலக்குடன் இந்த நிகழ்ச்சி நூறு நிகழ்ச்சிகளைத் தாண்டி தொடர்ந்து பயணிக்கிறது. சட்டத்தை அறிந்தால் பயம் குறையும், நம்பிக்கை பெருகும் என்ற நம்பிக்கையை மக்களிடம் விதைத்த ’சட்டம் ஒரு வகுப்பறை’ நிகழ்ச்சி நாள்தோறும் இரவு 8 மணிக்கு நமது ’புதுயுகம்’ தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.

