நாகை, காரைக்காலில் மத்தியக் குழு இன்று ஆய்வு

நாகை, காரைக்காலில் மத்தியக் குழு இன்று ஆய்வு

நாகை, காரைக்காலில் மத்தியக் குழு இன்று ஆய்வு
Published on

கஜா புயல் பாதிப்பு குறித்து மத்திய குழுவினர் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆய்வை நிறைவு செய்த நிலையில் இன்று நாகை, காரைக்காலில் ஆய்வு நடத்தவுள்ளனர்.

மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் புயல் பாதிப்பு குறித்து சென்னையில் நேற்றுமுன் தினம் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய மத்திய குழுவினர், கஜா புயல் பாதிப்புகள் குறித்து வரும் 27 ஆம் தேதிக்குப் பிறகு ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுமெனக் கூறினர்.

முதலில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குச் சென்ற மத்தியக்குழுவினர், குளத்தூர் பகுதியில் சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்தனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மின் கம்ப சீரமைப்புப் பணிகளை பார்வையிட்டனர். புதுக்கோட்டை காஞ்சிநகர் பகுதியில் சேதமடைந்த வீடுகளை ஆய்வு செய்து மக்களிடம் குறைகளைக் கேட்டனர். அங்கிருக்கும் அதிகாரிகளிடமும் விவரங்களைக் கேட்டறிந்தனர். அதைத்தொடர்ந்து வடகாடு, மாங்காடு ஆகிய பகுதிகளில் சேதமடைந்த தென்னை, வாழை ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். 

இதனைதொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் பருத்திக்கோட்டை பகுதியில் சாலை ஓரங்களில் இருந்த மரங்களின் சேதம் குறித்தும், விவசாய நிலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் ஒரத்தநாடு, புலவன்காடு கிராமத்தில் உள்ள தென்னை மர தோப்பினை மத்தியக்குழுவினர் ஆய்வு செய்த போது, அப்பகுதி தென்னை விவசாயிகள் அதிகாரிகளின் காலில் விழுந்து கண்ணீருடன் தங்கள் துயரங்களை கூறினர். அதனைத்தொடர்ந்து திப்பியகுடி துணை மின் நிலையம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்திய மத்தியக்குழு, அடுத்ததாக திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வைத் தொடங்கினர். முத்துபேட்டை, கல்லடிகொல்லை, ஜாம்பவானோடை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது சேதமடைந்த வீடுகள், தென்னை மரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பெற்றனர். 

இந்நிலையில் தஞ்சாவூர், திருவாரூரில் ஆய்வு முடித்த டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் நாகை வந்தனர். ‌நாகை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன்,‌ எஸ்.பி.உதயகுமார், மாவட்‌ட ஆட்சியர் சுரேஷ்குமார், வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோருடன் ஆய்வுக்கூட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆய்வு நடத்தியது குறித்து மத்திய குழுவினரும், பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளும் எடுத்துரைத்ததாக தெரிகிறது. இதற்கிடையில் மத்தியக்குழு இன்று நாகை மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதியில் ஆய்வு நடத்தவுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com