ஒகி புயல் பாதிப்பு: விரைவில் ஆய்வுக்கு வருகிறது மத்தியக் குழு
தமிழகம் மற்றும் கேரளாவில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைவில் வர உள்ளது.
வங்கக் கடலில் உருவான ஒகி புயலால் தென் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கேரளாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. ஒகி புயல் நேரத்தில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் இன்னும் கரை திரும்பாமல் உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு விரைவில் வர உள்ளது. இக்குழுவில் மத்திய உள்துறை, நிதி, விவசாயம், மீன்வளம் ஆகிய துறை அதிகாரிகள் இடம் பெற்றிருப்பர் எனத் தெரிகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் உயர் நிலை கூட்டத்தில் மத்தியக்குழு குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.