“தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்
பாஜக தேர்தலை தள்ளிப்போட நினைத்ததே இல்லையென்றும், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் நலனை பாதிக்கும் திட்டங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர்கள் அண்ணாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பாரதரத்னா விருது வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாக கூறினார். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்ட கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க நடவடிக்கை தேவை என்று பிரதமரிடம் கோரியதாகவும் கூறினார்.
இந்நிலையில் பிரதமர் மற்றும் முதலமைச்சர் சந்திப்பு தொடர்பாக மதுரையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “தமிழக முதல்வர் இன்று டெல்லிக்கு சென்றது தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களுக்காகவே. அதிமுகவின் உட்கட்சி பிரச்னை குறித்து பேச முதலமைச்சர் டெல்லிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. பாரதிய ஜனதா கட்சி தேர்தலை தள்ளிப் போட வேண்டும் என நினைத்ததே இல்லை. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.