யார் அந்த சூப்பர் சிஎம்? நாடாளுமன்றத்தில் பிரதான் கேள்வி!
பட்ஜெட் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை நடைபெற்றநிலையில் 2 ஆவது அமர்வு, மார்ச் 10 ஆம் தேதியான இன்று தொடங்கியுள்ளது. 24 நாட்கள் இடைவெளிக்குபின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆவது அமர்வு இன்று தொடங்கியிருக்கிறது.
மணிப்பூரில் மீண்டும் கலவரம், தொகுதிகள் மறுசீரமைப்பு , வக்ஃப் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் அம்மாநில பட்ஜெட்டுக்கான ஒப்புதல் உள்ளிட்டவற்றையும் மத்திய அரசு கோர உள்ளது. மறுமுனையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கத்தை அவையில் கோரவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த சூழலில், எதிர்கட்சி எம்பிக்களுக்கும் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும் இடையே காரசார விவாதம் நிகழ்ந்துவருகிறது.
நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ பாஜக ஆளாத மாநிலங்களிலும் புதிய கல்விக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது. தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் மாணவர்களை திமுக தவறாக வழிநடத்துகிறது.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ - டர்ன் போட்டது. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர தமிழக முதல்வர் முன்வந்தார். ஆனால், சூப்பர் முதல்வர் தடுத்துவிட்டார். சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். சூப்பர் முதல்வர் யார்?. யார் அந்த சூப்பர் முதல்வர் என்பது குறித்து திமுக எம்பி. கனிமொழி பதில் அளிக்க வேண்டும்.” போன்ற கருத்துக்களை அவர் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சரின் பேச்சை கண்டித்து திமுக எம்பிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், “ மத்திய அரசின் கொள்கையை ஏற்காததற்காக மாநில அரசுக்கு நிதியை மறுக்கக்கூடாது. மாநில அரசுக்கு நிதி வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை ஒன்றிய அரசு வீணாக்குகிறது.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.