ஒகி புயலுக்கு இதுவரை 39 பேர் பலி: உள்துறை அமைச்சகம்
ஒகி புயலால் தமிழகம் மற்றும் கேரளாவில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி அருகே ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக உருவெடுத்து கன்னியாகுமரியை சூறையாடிச் சென்றது. அத்துடன் லட்சத்தீவு மற்றும் கேரளாவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது. இந்த புயலால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான தமிழக மற்றும் கேரள மீனவர்கள் கடலில் சிக்கிக் கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிருடனும், பலர் உயிரிழந்த நிலையிலும் மீட்கப்பட்டனர். இந்நிலையில் ஒகி புயலால் இதுவரை தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 39 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்துறை அமைச்சக அறிக்கையின்படி, ஒகி புயலின் பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 10 பேரும், கேரள மாநிலத்தில் 29 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலினால் ஏற்பட்ட தாக்கத்தின்போது தமிழகத்தில் 74 மீனவர்களும், கேரளாவில் 93 மீனவர்களும் காணாமல் போய் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஒகி புயலால் தமிழகத்தில் 2,802 பேரும், கேரள மாநிலத்தில் 33,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் புயலின் கோர தாண்டவத்தால் தமிழகத்தில் 4 மாவட்டங்களும், கேரளாவின் 8 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.