தமிழ்நாட்டில் 119 கி.மீ மெட்ரோ பணிகள்.. சர்ச்சைகளுக்கு மத்தியில் பதிலளித்த மத்திய அரசு!
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில், தமிழ்நாட்டில்119 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருவதாக,மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில், தமிழ்நாட்டில்119 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருவதாக,மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி ஒன்றுக்கு, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் மெட்ரோ திட்டங்கள் குறித்து, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதன்படி, ஏற்கெனவே, செயல்பாட்டிலுள்ள மெட்ரோ பாதைகளைப் பொருத்தவரை, 96.1 கிலோமீட்டர் தூரத்துடன் கர்நாடகா முதலிடத்திலும், தெலங்கானா 69 கிலோமீட்டர் தூரத்துடன் இரண்டாமிடத்திலும், தமிழ்நாடு 54 கிலோ மீட்டர் தூரத்துடன் மூன்றாமிடத்திலும் உள்ளது. தற்போது இந்த 4 தென்னிந்திய மாநிலங்களிலும், 251.36 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அதிகபட்சமாக கர்நாடகாவில், 121.16 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அதற்கடுத்ததாக தமிழ்நாட்டில் 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டங்கள் மூலதனம் தேவைப்படுபவை என கூறியுள்ள மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம்,மெட்ரோ ரயில் கொள்கை 2017இன்படி அவற்றுக்கு விரிவான மதிப்பீடு தேவைஎன தெரிவித்துள்ளது. மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதல் என்பது, திட்டங்களின் சாத்தியக்கூறு மற்றும் வளங்களின் இருப்பைப் பொறுத்தது எனவும், எனவே ஒப்புதலுக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது எனவும் கூறியுள்ளது.

