உடல் உறுப்பு தான அமைப்பில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதா ? - வைகோ கண்டனம்

உடல் உறுப்பு தான அமைப்பில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதா ? - வைகோ கண்டனம்
உடல் உறுப்பு தான அமைப்பில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதா ? - வைகோ கண்டனம்

உடல் உறுப்பு தானம் - மாற்று அறுவைச் சிகிச்சையின் முன்னோடியான தமிழ்நாட்டின் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவது கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

அனைத்து மாநிலங்களின் உறுப்புதான அமைப்பை தேசிய அமைப்புடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு பெற்ற முதல் மாநிலம் என்ற சிறப்பு இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டுக்குத்தான் உண்டு. மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாகக் கொடுத்து, தமிழகத்தில்தான் அதிகம் பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு அறுசைச் சிகிச்சையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு தமிழகத்திற்கு விருது வழங்கி உள்ளது.பிரதமர் மோடி  வானொலியில் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி உரையிலும், தமிழகம் உடல் உறுப்பு தானத்தில் தலைசிறந்த முன்னோடி மாநிலமாக இருக்கிறது. மற்ற மாநிலங்கள் தமிழ்நாட்டைப் பின்பற்றக்கூடிய வகையில் செயல்பட வேண்டும் எனறும் பாராட்டினார்.

இந்நிலையில்தான் மத்திய அரசு 2014ல் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஒன்றை உருவாக்கியது. அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் உறுப்பு தான அமைப்புகளையும், தேசிய உறுப்பு மாற்று அமைப்புடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தற்போது செய்திகள் வந்துள்ளது.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் உடல் உறுப்பு தான அமைப்பை, தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புடன் இணைத்துவிட்டால், நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும். உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் உள்ள நோயாளிகளை தவிக்க விட்டுவிட்டு, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் உடல் உறுப்பு தானம் பெறும் நிலைமையை ஏற்படுத்த பா.ஜ.க.அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, ஆதிக்கம் செலுத்த நினைக்கும் பா.ஜ.க. அரசு, மாநில அதிகாரப்பட்டியலின் கீழ் வரும் சுகாதாரத் துறையை முழுமையாகப் பறித்துக்கொண்டு, மேலாதிக்கத்தை நிலைநிறுத்த நினைப்பது கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரானது ஆகும். தமிழக அரசு இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். இதை ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது. 

தேசிய உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புடன் மாநிலங்களில் செயல்படும் உடல் உறுப்பு மாற்று அமைப்புகளை இணைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com