புதிய ஒஎன்ஜிசி திட்டத்திற்கு மத்திய அரசு தடை: புதிய தலைமுறைக்கு கிடைத்த கடிதம்
இயற்கை எரிவாயு எடுப்பதற்கான புதிய திட்டத்திற்கு ஒப்புதல் நிராகரிப்பட்ட கடிதம் புதிய தலைமுறைக்கு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாகக் கிடைத்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக 22 புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்குமாறு, கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் ‘ஒஎன்ஜிசி’ சார்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. இதுதொடர்பாக நிபுணர் குழு கடந்த ஆண்டே அக்டோபரில் இருமுறை கூடி ஆலோசித்து, சுற்றுச்சூழல் அனுமதி அளிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தியிருந்தது.
அந்தப் பரிந்துரையை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு 2008இல் விதிக்கப்பட்ட நிபந்தனைகள், நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என அறிக்கை அளிக்க சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சென்னை மண்டல அலுவலகத்தை கடந்த ஆண்டு ஆகஸ்டில் கேட்டுக்கொண்டது. இதற்கு 2017 அக்டோபரில் சென்னை மண்டல அலுவலகம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில் ஆய்வுப் பணிகளைத் தொடங்க சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதித்த கால அவகாசம் முடிந்த பிறகு ஒஎன்ஜிசி நிறுவனம் 15க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகளை தோண்டியதும், சுற்றுச்சூழல் நிபந்தனைகள் மீறப்படுவதும் தெரியவந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரத்தில் இந்தத் திட்டத்திற்கு முழுமையான இணக்கம் கிடைக்கப்பெறாததால், 22 எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனஅமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எண்ணெய் கிணறுகள் தோட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இத்திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை பல தரப்பினரும் வரவேற்கின்றனர்.