Fengal Cyclone| தமிழ்நாடு கேட்டதும் மத்திய அரசு கொடுத்ததும்..!
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியாக 944 கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், இயற்கை பேரிடர்களால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்க மோடி அரசு தோளோடு தோள் கொடுத்து துணை நிற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக 944 கோடியே 80 லட்சம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு சென்றுள்ள மத்தியக்குழுவின் அறிக்கைக்கு பிறகு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் நிதியுதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தாண்டு 28 மாநிலங்களுக்கு 21 ஆயிரத்து 718 கோடி ரூபாயை விடுவித்து இருப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.. இந்நிலையில், இதற்கு அது போதுமானதாக இருக்காது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.