நியூட்ரினோ திட்டம் அமலானால்... மறக்காமல் மரம் வளர்க்கவும்..!
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படுவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வாழ வழி இல்லாத சூழல் உருவாகும் என்பதில் எள்ளவும் உண்மையில்லை என சுற்றுச்சூழல் நிபுணர் குழு கூறியுள்ளது.
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி வழங்குமாறு, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் மார்ச் 5-ம் தேதி, சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைவதற்கான சாத்தியம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படுவதால் , நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு பாலைவனமாக மாறும் என்ற கருத்து தவறு என்றும், வெடி வைத்து தகர்ப்பதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வாழ வழி இல்லா சூழல் உருவாகும் என்பதில் எள்ளவும் உண்மையில்லை என்றும் சுற்றுச்சூழல் நிபுணர் குழு கூறியுள்ளது.
நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கும் போது மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி , வனவிலங்குகள் ஆணைய அனுமதி ஆகியவற்றை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திட்டத்திற்காக பாறைகளை வெடிக்க வைக்கும் போது ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்துவதால், அருகாமையில் யாரும் அல்லது பாதிப்படையும் வகையில் எவையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.
தண்ணீர் தேவைக்காக முல்லை பெரியாறை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் , அதிகபட்சம் ஒரு நாளைக்கு 340 கிலோ லிட்டர் தண்ணீர் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிலத்தடி நீர் உரிய முறையில் மேலாண்மை செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. எல்லாம் முடிந்த பின் மறவாமல் மரம் நட்டு வளர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.