புலி வருது.. புலி வருது - அரசியலுக்கு வராமல் போன பிரபலங்கள்!

புலி வருது.. புலி வருது - அரசியலுக்கு வராமல் போன பிரபலங்கள்!
புலி வருது.. புலி வருது - அரசியலுக்கு வராமல் போன பிரபலங்கள்!

"புலி வருது புலி வருது" என்ற கதையை சிறு வயதில் கேட்டிருப்போம். அந்த கதையில் கூட கடைசியில் நிஜமாகவே புலி வந்துவிட்டது. அரசியலிலும் பலர் புலி வருது கதையை கூறிவந்தனர். ஆனால் கடைசியில் தேர்தல் தான் வந்ததே தவிர புளி விற்பவர் கூட வரவில்லை.

சசிகலா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பிறகு அதிமுகவிலிருந்து அவரை நீக்கி பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. 4 ஆண்டு சிறை தண்டனை முடித்து விடுதலையான சசிகலா, முகப்பில் ஜெயலலிதா படத்துடன் அதிமுக கொடி பொறுத்தப்பட்ட காரில் வலம் வர, அரசியல் களம் பரபரப்பானது.

அரசியல் களத்தில் இறங்குவேன், ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களுடன் இருப்பேன் என கூறிவந்த சசிகலா, கடந்த மார்ச் மாதம் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார். அரசியலில் இறங்குவதற்கு முன்பே அதிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தது அப்போதைய ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது.

ரஜினிகாந்த்

இதோ இப்போ தொடங்குறேன் அப்போ தொடங்குறேன் என கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ரசிகர்களை எதிர்பார்ப்பிலேயே வைத்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். போர் வரட்டும். எழுச்சி வரட்டும். அதிசயம் நிகழும். அற்புதம் நிகழும் என அவ்வபோது அனல் பறந்தது அவரது அரசியல் பஞ்ச். கட்சிக்கு பொறுப்பாளர்களை நியமித்துவிட்ட நிலையில், டிசம்பர் 31ஆம் தேதி கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு வழக்கம்போல் ஏமாற்றமே மிஞ்சியது. டிசம்பர் 29ஆம் தேதியே ரஜினியிடமிருந்து உறுதியான தகவல் வந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், கட்சி தொடங்கப்போவதில்லை என டிவிட்டரில் அறிவித்தார்.

மு.க.அழகிரி

இவர்களைப் போலவே "தேர்தலில் எனது பங்களிப்பு நிச்சயம்" என கூறி வந்தவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி. ஆதரவாளர்களுடன் ஆலோசித்தே அடுத்தக்கட்ட முடிவு என்றும் கூறினார். சொன்னபடியே ஆதரவாளர்களை திரட்டி ஜனவரி மாதத்தில் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டிய அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சர் ஆக முடியாது என கூறினார். நல்ல முடிவை விரைவில் அறிவித்தாலும் அறிவிக்கலாம், எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இறுதி வரை அவரிடமிருந்த எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால், அவர் முன்பு சொன்னபடியே வாக்களித்து தேர்தலில் தமது பங்கை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com