“உள்நோக்கத்துடன் கைது நடவடிக்கை”-ஆர்.எஸ்.பாரதி கைது குறித்து விவரிக்கும் பரந்தாமன்

“உள்நோக்கத்துடன் கைது நடவடிக்கை”-ஆர்.எஸ்.பாரதி கைது குறித்து விவரிக்கும் பரந்தாமன்

“உள்நோக்கத்துடன் கைது நடவடிக்கை”-ஆர்.எஸ்.பாரதி கைது குறித்து விவரிக்கும் பரந்தாமன்
Published on

சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார்.

நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கொரோனாவுக்காக தனிமைப்படுத்திக் கொண்டிருந்த ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து திமுகவின் பரந்தாமன் கூறுகையில், “மார்ச் 13 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலம் கடந்து இப்போது கைது நடவடிக்கையை பார்க்கும்போது உள்நோக்கத்துடன் தான் இது நடந்துள்ளது. ஆர்.எஸ்.பாரதி வீட்டிற்கு போன் செய்து விசாரித்தேன். அவரது மனைவி மருத்துவர். 70 வயதிற்கு மேல் இருக்கும் அவருக்கு சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. கொரோனாவா இருக்குமோ என்ற காரணத்தினால் தனிமைப்படுத்திக் கொண்டிருந்துள்ளார். பரிசோதனையும் செய்துள்ளார். அதன் முடிவு வெளியாகவில்லை. இவை அனைத்தும் போலீசாரிடம் சொல்லியும் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தலைமறைவு குற்றவாளிபோல் நடத்தியுள்ளனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். இதை திமுக சட்டரீதியாக சந்திக்கும். பல்வேறு சிறைச்சாலைகளை கண்டவர்தான் ஆர்.எஸ்.பாரதி. இதுபோன்ற பூச்சாண்டிக்கெல்லாம் அவர் அஞ்சமாட்டார். திமுகவும் பயப்படாது. நாடு இருக்கும் நிலையை நினைத்து பார்க்க வேண்டும். இந்த சூழ்நிலையில் அவரை சிறையில் அடைத்தால் நாளை அவர் உயிருக்கு அரசாங்கத்தால் பாதுகாப்பு கொடுக்க முடியுமா?” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “ பிப்ரவரியில் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார், அந்த பிரிவில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது எல்லாம் உண்மைதான். ஆனால் ஆர்.எஸ்.பாரதி எந்த காலத்தில் என்ன கூறுகிறார் என்பதை பார்க்க வேண்டும். அவர் கொரோனா பாதுகாப்பு பொருட்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறி வருகிறார். இந்த சமயத்தில் இதற்காகத்தான் கைது நடவடிக்கை என்றுதான் நான் பார்க்கிறேன்.

பிப்ரவரியில் வழக்குபதிந்து விட்டு கொரோனா தடுப்பு பணியில் இருந்ததால் இப்போது கைது நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் பிப்ரவரியில் ஒரு தடுப்பு பணியும் கிடையாது. மார்ச் கடைசியில்தான் பணி ஆரம்பிக்கப்பட்டது. பிப்ரவரியில் தடுப்புப்பணி என்றால் மக்கள் இதை நம்பமாட்டார்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவுக்கு சோதனை கொடுத்தவர் என்று பார்த்தால் அது ஆர்.எஸ்.பாரதியாகத்தான் இருக்கும். அவரே பல்வேறு ரெக்கார்டுகளை வெளிக்கொண்டு வருவார். கொரோனா தடுப்பு பணியில் நற்பெயர் பெற்று வரும் இந்த சூழ்நிலையில் இது அரசாங்கத்திற்குதான் அவப்பெயரை ஏற்படுத்தும். கொரோனா பணியை திசைதிருப்பும் செயலாக இது உள்ளது.” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com