புத்தாண்டில் உதவிய சிசிடிவி கேமரா : போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னையில் முதன்முறையாக சிசிடிவி கேமரா பதிவுகளை பயன்படுத்தி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து காவல்துறை விரிவான அறிவிப்பை வெளியிட்டது. அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும்
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்தால் பாஸ்போர்ட் சமர்ப்பிக்கும் போது சிரமம் ஏற்படும் என்றும் காவல்துறை தெரிவித்திருந்தது.
மேலும் பைக் ரேஸை தடுக்க 20 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையின் முக்கிய பகுதிகளில்368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் முதன்முறையாக சிசிடிவி கேமரா பதிவுகளை பயன்படுத்தி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் முக்கிய சாலைகளான ஈ.வே.ரா பெரியார் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கதீட்ரல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தி விதிமீறல்களில் ஈடுபட்ட 401 நபர்கள் மீது வழக்குகள் பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஒட்டுநர் உரிமம் ரத்து, பாஸ்போர்ட் அனுமதி மறுப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.