தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: விடுதி வார்டனிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: விடுதி வார்டனிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம்: விடுதி வார்டனிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம்

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், சிபிஐ 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளது. ஜாமினில் வெளியே வந்த விடுதி வார்டனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டி தூய இருதய பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவிகள் விடுதியில் மாணவியை சுத்தம் செய்யக்கூறி வார்டன் கொடுமைப்படுத்தியதால் மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து விடுதி வார்டன் சகாயமேரியை திருக்காட்டுப்பள்ளி போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து மாணவியை பள்ளியில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக சமூகவலைதளங்கள் மூலம் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக பாஜக இந்த குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டங்களை நடத்தியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த மதுரைக்கிளை உயர்நீதிமன்றம், சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றியதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த நிலையில் மாணவி தற்கொலை வழக்குத் தொடர்பாக விடுதி வார்டன் சகாயமேரி மீது சிபிஐ நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளான 305- குழந்தைகளை தற்கொலை செய்ய தூண்டுதல், 511- குற்றம் செய்ய முயற்சித்தல் மற்றும் சிறார் நீதி சட்டப்பிரிவுகளான 75, 82(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதனுடைய முதல்தகவல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. இன்று சிபிஐ இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.

இந்த முதல் தகவல் அறிக்கையில், மாணவியையே புகார்தாரராக பதியப்பட்டுள்ளது. மேலும், சிறுமி 8ஆம் வகுப்பு முதல் மைக்கேல்பட்டி தனியார் பள்ளியில் படித்து வருவதாகவும், கடந்த ஓராண்டாக பள்ளி ஹாஸ்டலில் தங்கி படித்து வருவதாக தெரிவித்துள்ளார். அங்கு ஹாஸ்டல் வார்டனாக இருந்துவரும் சகாயமேரி, ஹாஸ்டலில் தங்கி உள்ள பள்ளி மாணவிகளை ஹாஸ்டல், மைதானம் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யச்சொல்லி வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இதனால் படிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சுத்தம் செய்யச்சொல்லி தன்னை வற்புறுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டு விஷ மருந்து குடித்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடல் நிலை பாதிக்கப்பட்டதால் பெற்றோருடன் அனுப்பி வைத்ததாகவும், அதன்பிறகு உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாணவி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சென்னை சிபிஐ டிஎஸ்பி ரவி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளார். சிபிஐ டி.எஸ்.பி ரவி தலைமையில் விசாரணை தொடங்கி உள்ளது. இந்நிலையில் திருக்காட்டுப்பள்ளி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த விடுதி வார்டன் சகாயமேரி நேற்று முன்தினம் ஜாமினில் வெளியே வந்தார். சிபிஐ தற்போது விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் சகாயமேரியிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com