தங்கம் கடத்தல் புகார்- விமான பயணிகளிடம் சிபிஐ சோதனை
அதிகளவில் தங்கம் கடத்தப்படுவதாக எழுந்த புகாரையடுத்து திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் 2ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் அடிக்கடி பிடிபடும் நிலையில், மதுரையில் இருந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை நடத்தினர். சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி வந்த 70 பயணிகளிடம் விசாரணை நடைபெற்றது. சுங்கத்துறை சோதனை முடிந்து வெளியேறக் காத்திருந்தவர்களை, சிபிஐ அதிகாரிகள் 13 பேர் தடுத்து நிறுத்தினர். இதனால் சிபிஐ அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் இடையே தகராறு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதேபோல், சுங்கத்துறை அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மற்ற விமானங்களில் வந்த பயணிகளிடமும் சோதனை நடைபெற்றது. இந்த நடவடிக்கை 2ஆவது நாளாக இன்றும் நீடிக்கிறது. ஓராண்டில் பிடிபடும் தங்கத்தின் அளவை காட்டிலும், கடந்த மூன்று மாதத்தில் அதிகளவில் தங்கம் பிடிபட்டது. இதனால் தங்கக் கடத்தலில், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் சிபிஐ அதிகாரிகள் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.