சாத்தான்குளம் கொலை வழக்கு
சாத்தான்குளம் கொலை வழக்குfile picture

இறுதிக்கட்டத்தை நெருங்கும் சாத்தான்குளம் கொலைவழக்கு - சிபிஐ தரப்பு சொல்வது என்ன?

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து, பின் சிபிஐ காவல்துறையினர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் உள்ள 132 சாட்சிகளில், முக்கிய சாட்சிகளான ரேவதி மற்றும் பியூலா உட்பட 47 சாட்சிகளை மட்டுமே இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளனர். 47 சாட்சிகளிடம் விசாரணை நடத்த ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க இன்னும் குறைந்தது 5 வருடங்கள் ஆகும்.

கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளேன். ஏற்கனவே பல முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படுவேன். ஆகவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

மதுரை நீதிமன்றம்
மதுரை நீதிமன்றம்

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. தற்போது ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் விசாரணையை தாமதமாக்கி வருகின்றனர். ஒரு சாட்சியை விசாரணை செய்வதற்கு ஒருநாள் போதவில்லை. சில சாட்சிகளை விசாரிக்க 6 நாள் வரை தேவைப்பட்டது. ஆகவே, மே மாத நீதிமன்ற விடுமுறை காலத்திலும் இந்த வழக்கினை கீழமை நீதிமன்றம் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, வழக்கினை தீர்ப்பிற்காக ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com