சிபிஐ சோதனை நிறைவு.. சிதம்பரம் வீடுகளில் சிக்கியது என்ன..?
மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சிபிஐ சோதனை பிற்பகலில் நிறைவடைந்தது. இதில் கணினி ஹார்டுடிஸ்க், பல முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தினர். இதுதவிர, டெல்லி, நொய்டா, காரைக்குடி ஆகிய இடங்களில் உள்ள ப.சிதம்பரத்துக்கு சொந்தமான 14 இடங்களில் அதிரடியாக இந்த சோதனை நடைபெற்றது. சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்திடம் தனியாக 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.
அங்கு கணினி ஹார்டுடிஸ்க் மற்றும் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றினர். சிபிஐ அதிகாரிகளின் சோதனை பிற்பகல் 2.45 மணியளவில் நிறைவடைந்தது. ஐஎன்எக்ஸ் நிறுவன அந்நிய முதலீட்டுக்கு அனுமதி தந்ததில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியதாக தெரிகிறது.
முன்னதாக இதுகுறித்து பேசிய ப.சிதம்பரம், சிபிஐ சோதனைகள் மூலம், தாம் வெளிப்படையாக பேசுவதையும், எழுதுவதையும் தடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். கார்த்திக் சிதம்பரமும், சிபிஐ அதிகாரிகள் ஆவணங்கள் எதையும் கைப்பற்றவில்லை என்றும் தன் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது எனவும் கூறினார்.