குட்கா முறைகேடு வழக்கு: விசாரணையை மீண்டும் தள்ளிவைத்த சிபிஐ நீதிமன்றம்! என்ன காரணம்?

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு மேலும் அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
vijaya bashkar
vijaya bashkarpt desk

தமிழ்நாட்டில் தடையை மீறி, அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்றது தொடர்பாக கடந்த 2018ஆம் ஆண்டு வருமான வரித்துறை சில நடவடிக்கைகள் எடுத்திருந்தது. அதன் அடிப்படையில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, கடந்த 2021 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

cbi
cbipt desk

இந்நிலையில் இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்து, முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐக்கு திரும்ப அளித்தது நீதிமன்றம்.

இந்த நிலையில், தமிழக காவல்துறை முன்னாள் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதியளித்தது. ஆனால், சிபிஐ வழக்கில் உள்ள மேலும் சிலரிடம் விசாரணை நடத்தவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி மலர் வாலன்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

gutka
gutkapt desk

அப்போது சிபிஐ தரப்பில், “குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு சிலருக்கு எதிராக விசாரணை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக இன்னும் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. திருத்தப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காகவே இந்த வழக்கு 11வது முறையாக  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com