புதுச்சேரி மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு: 13 பேர் மீது சிபிஐ வழக்கு
புதுச்சேரி மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 13 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் 2017-ம் ஆண்டு நடந்த மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலாளர் பி.ஆர்.பாபு, மற்றும் சென்டாக் தலைவர் நரேந்திரகுமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, சுகாதாரத்துறை இயக்குநர் ராமன், சென்டாக் கன்வீனர் வி.கோவிந்தராஜ், இணை கன்வீனர் வி.பஜனிராஜ்ஜா, ஒருங்கிணைப்பாளர் ஜோனதன் டேனியல் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக இயக்குநர்கள், பதிவாளர் என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டினால் 96 தகுதியான மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் பயில இடம் கிடைக்கவில்லை எனவும், அவர்களுக்கு சேர்க்கைக்கான அனுமதி அளித்த சென்டாக் அதிகாரிகள், அவர்களுக்கு இடம் கிடைக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. அதோடு, சென்டாக் பரிந்துரைத்த மாணவர்களை சேர்க்காமல் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு வேறு மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் சேர்த்திருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.