எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் முகிலனிடம் தொடர் விசாரணை
திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை எழும்பூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி ஆஜர்படுத்துகிறது.
எழும்பூரில் காணாமல் போன முகிலன் 140 நாட்களுக்கு பிறகு நேற்று திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரிடம் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முகிலன் தன்னை யாரோ கடத்தியதாகவும் பின்னர் நான் வேறு ஏதோ ஒரு மாநிலத்தில் இருந்தேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், எஸ்பி மல்லிகா ஆகியோர் முகிலனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு நாட்கள் முகிலன் எங்கிருந்தார், யாருடன் பேசினார், என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் முகிலனின் வாக்குமூலங்களை வீடியோ பதிவு செய்யும் வேளையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சற்று நேரத்திற்கு முன்பு முகிலனின் மனைவி பூங்கொடி, வழக்கறிஞர் சுதா ராமாலிங்கம் ஆகியோர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்தனர். முகிலனை 15 நிமிடங்கள் அவரது மனைவி பூங்கொடி சந்தித்து பேசினார். உடன் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் இருந்தார். நீதிமன்றத்தில் அனைத்து விவரத்தையும் தெரிவிக்க இருப்பதாக முகிலன் கூறியதாக வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார். இன்று இரவுக்குள் சிபிசிஐடி நீதிமன்றத்தில் முகிலனை ஆஜர்படுத்த உள்ளதாக எழும்பூர் போலீசார் தெரிவிக்கின்றனர்.