கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இவ்விரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு சுமார் 8 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர் நேற்று தமிழக எல்லையை வந்தடைந்த நிலையில், இன்று காலை மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.
காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணைக்கு போதிய அளவு காவிரி நீர் வந்தவுடன், சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

