கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை - விவசாயிகள் மறியல் போராட்டம்
கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை எனக்கூறி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 43 நாட்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் நூற்றுக் கணக்கான நீர்நிலைகள் வறண்டு காணப்படுவதாகக் கூறுகின்றனர். தற்போது வரை மேட்டூர் அணை நான்கு முறை முழுக் கொள்ளளவை எட்டியும், 130 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்துள்ளதாகப் புகார் கூறும் விவசாயிகள், பாசன வாய்க்கால்களை முறையாக தூர்வாரவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், இன்று பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் கடைகளை அடைத்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், 20 நாட்களுக்குள் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும் என வாக்குறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.