சென்னையின் குடிநீருக்கும் உதவும் காவிரி தண்ணீர்..!
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி தண்ணீர் டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமின்றி, சென்னையின் குடிநீர் தேவைக்கும் பெரிதும் உதவிவருகிறது. அது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்வோம்
கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரானது ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. பின் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி தண்ணீரானது திருச்சி மாவட்டத்திலுள்ள கொள்ளிடத்திற்கு வந்து சேர்கிறது. அங்கிருந்து தஞ்சை மாவட்டம் கீழணைக்கு வரும் காவிரி நீர் வடவாறு வழியாக கடலூர் மாவட்டத்திற்குள் நுழைகிறது.
வடவாறில் இருந்து ராஜன்வாய்க்கால் மூலம் 65,000 ஏக்கர் விளைநிலங்களின் பாசன வசதிக்காக காவிரி திருப்பி விடப்படுகிறது. மறுபுறம், வடவாற்றிலிருந்து வீராணத்திற்கு தண்ணீர் வருகிறது. வீராணத்திலிருந்து ஏறக்குறைய 300 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சென்னைக்கு ராட்சத குழாய்கள் மூலம் வினாடிக்கு 77கன அடி நீர் குடிநீருக்காக அனுப்பப்பட்டு வருகிறது.