பொறுமை காக்கும் மக்கள் பொங்கி எழும் காலம் விரைவில் வரும் - அய்யாக்கண்ணு
காவிரி விவகாரத்தில் பொறுமை காக்கும் பொதுமக்கள் பொங்கி எழும் நிலை விரைவில் உருவாகும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாகண்ணு தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில் அனைத்திந்திய மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒருகாலத்தில் குறிப்பிட்ட தண்ணீர் போக மீதம் தமிழக விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலைமாறி, காவிரிக்காக கையேந்தி நிற்கும் நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கடமையை செய்ய பிரதமர் மோடி மறுப்பதாக குற்றம்சாட்டினார். தமிழகத்தை பாலைவனமாக்கி மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுத்து ஆண்டுக்கு பத்தாயிரம் கோடிக்கு மேல் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்றார். விவசாயம் அழிந்து கார்ப்ரேட் பிடியில் மக்கள் சிக்கினால் எதிர்காலத்தில் மக்கள் உடல்ரீதியான பாதிப்பை சந்திக்க நேரிடும் என்று கூறினார். காவிரி விவகாரத்தில் பொறுமை காக்கும் மக்கள் பொங்கி எழும் காலம் விரைவில் வரும் என்றும் எச்சரித்தார்.