
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு சுவாசக் கோளாறு காரணமாக கருணாநிதிக்கு ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சுவாசத்தை எளிமைப் படுத்துவதற்கும், சிரமம் இல்லாமல் உணவு உண்பதற்காகவும் அவருக்கு தொண்டையில் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை, அதனை மாற்றுவதற்காக மருத்துவமனைக்குச் சென்று உடலை பரிசோதித்து வருகிறார்.
ட்ரக்கியாஸ்டமி சிகிச்சையில், தொண்டையில் குழாய் மாற்றுவதற்காக காவேரி மருத்துவமனையில் கடந்த வாரம் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். அதற்கான சிகிச்சை முடிந்து உடனே வீடு திரும்பிய அவர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இதனிடையே கருணாநிதியின் உடல்நிலை குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. அதில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நலத்தில் வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது என்றும் கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. வீட்டிலேயே அதற்கான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையை கவனத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என்றும் காவேரி மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.