ஸ்கீம்-க்கான வரைவு திட்டம் ரெடி - என்ன பெயரில் என்பது சஸ்பென்ஸ்..!

ஸ்கீம்-க்கான வரைவு திட்டம் ரெடி - என்ன பெயரில் என்பது சஸ்பென்ஸ்..!
ஸ்கீம்-க்கான வரைவு திட்டம் ரெடி - என்ன பெயரில் என்பது சஸ்பென்ஸ்..!

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் ஸ்கீம்-க்கான வரைவுத் திட்டம் தயாராகிவிட்டதாக மத்திய நீர்வளத் துறை அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது. அதில், தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் அறிவித்தனர். அத்துடன் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த புதிய திட்டத்தை (ஸ்கீம்) வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, அதற்காக 6 வாரம் கெடுவும் விதித்திருந்தது. 

ஆனால் மத்திய அரசு உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. அதேநேரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. 

இதனையடுத்து காவிரி நீர் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டத்தை மே 3-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசம் வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் ஆட்சேபனையை அடுத்து மத்திய அரசும் தனது மனுவை உடனடியாக திரும்பப் பெற்றது. 

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் வரைவுத் திட்டத்தை அளிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அளித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது. மத்திய அரசு மே 3ம் தேதி என்ன செய்யப் போகிறது என்பதை தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இரண்டு விதமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஒன்று, கர்நாடக மாநிலத்தில் மே 12ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் இருப்பதால் வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு மேலும் கால அவகாசம் கோரவுள்ளது என்பது. மற்றொன்ரு ஸ்கீம்-க்கான வரைவுத் திட்டம் தயாராகிவிட்டது என்பது. 

இதுகுறித்து மத்திய நீர்வளத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், மேலாண்மை வாரியம் என்பதற்கு நெருக்காமன அளவில் ஸ்கீம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “ஆணையமானது(மேலாண்மை வாரியமாக இருக்கலாம்) ஐஏஎஸ் அதிகாரி அல்லது தொழில்நுட்ப நிபுணர் தலைமையில் அமைக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த ஆணையத்தில் சேர்மன் உட்பட 5 முழு நேர உறுப்பினர்கள் இருப்பார்கள். மேலும், தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த 4 பகுதி நேர உறுப்பினர்கள் இருப்பார்கள். இதுகுறித்த முழு தகவல்களை கேபினட் அமைச்சகத்திடம் சமர்பிக்கப்படும். தமிழ்நாடு எந்த பீதியும் அடைய தேவையில்லை. ஆணையத்திற்கு பெயர் எதுவாகவும் இருக்கலாம். ஆனால், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட காவிரி சார்ந்த மாநிலங்களின் தண்ணீர் பகிர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பு படி உறுதி செய்யப்படும்” என்று அவர் கூறினார்.

மே 3ம் தேதி மத்திய அரசு வரைவுத் திட்டத்தை சமர்பிக்கும் பட்சத்தில், அடுத்தக்கட்டமாக உச்சநீதிமன்றம் நான்கு மாநில அரசுகளை அழைத்து கருத்து கேட்கும் என்று தெரிகிறது. அதன் பிறகு ஒரு இறுதி முடிவை எடுத்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடும். இதனிடையே, மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மசூத் ஹுசைனை புதிய தலைவராக கடந்த ஏப்ரல் 27ம் தேதி மத்திய அரசு நியமித்துள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com