காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு கடந்த முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்படவில்லை. வரைவுத் திட்டம் தயாராக இருப்பதாகவும் ஆனால் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரசியல் காரணங்களைக் காட்டி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யாமல் தள்ளிப்போடுவதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கு 4 டிஎம்சி நீரை திறக்கவும் கர்நாடகா அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, கர்நாடகா அணைகளில் போதிய நீர் இல்லை என்றும், குடிநீர் தேவைக்கே பற்றாக்குறை இருப்பதால் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில் காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு இன்று காலை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து காவிரி வழக்கு சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் 11.45 மணியளவில் மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.