சிலிண்டர் விபத்து
சிலிண்டர் விபத்துpt web

’இப்படி செய்யலாமா?”- நாமக்கல் சிலிண்டர் தீ விபத்திற்கு இதுதான் காரணம்! முதற்கட்ட விசாரணை சொல்வதென்ன?

வீட்டில் இருந்த பார்த்தசாரதி வீட்டை வெளியேற முடியாமல் சமையல் அறைக்குள் புகுந்தார். குறுகலான பகுதியில் வீடு அமைந்ததாலும் தனலட்சுமி உடல் தீப்பற்றி எரிந்ததாலும் புகை முழுவதும் பார்த்தசாரதியின் வீட்டினுள் பரவியது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அக்ரஹார வீதியில் வசித்து வருபவர்கள் பார்த்தசாரதி (76) - லதா தம்பதியினர். இவர்களது வீட்டில் சிலிண்டர் காலியான நிலையில் புதிதாக சிலிண்டர் பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து இன்று தனியார் கேஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் என்பவர் பதிவு செய்த சிலிண்டரை பார்த்தசாரதியின் வீட்டிற்கு விநியோகம் செய்தார். அப்போது பார்த்தசாரதியின் வீட்டின் அருகே வசித்து வந்த ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர் லட்சுமி நாராயணனின் மனைவி தனலட்சுமி, தங்களது வீட்டில் உள்ள சிலிண்டரில் கடந்த சில நாட்களாக கசிவு ஏற்படுவதாகவும் அதனை சரிசெய்து தருமாறும் கேஸ் நிறுவன ஊழியர் அருண்குமாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அருண்குமார் சிலிண்டர் ரெகுலேட்டரை நீக்கி கத்திரிக்கோல் கொண்டு கேஸ் கசிவை சரிசெய்ய முயன்றார்‌. அப்போது எதிர்பாராத விதமாக கேஸ் அதிகளவில் கசிந்து சிலிண்டரில் தீப்பற்றி உள்ளது‌. இதில் படுகாயமடைந்து அலறியடித்து அருண்குமார் வெளியேறிய நிலையில், தனலட்சுமி தீக்காயமடைந்தார். அதனை தொடர்ந்து சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள், நாமக்கல் தீயணைப்புத் துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கேஸ் கசிந்து எரிந்த கொண்டிருந்த சிலிண்டரை, தீயை அணைத்து லாவகமாக வெளியே எடுத்து கேஸ் கசிவை நிறுத்தினர். தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தனலட்சுமி இருந்த அறை மற்றும் பார்த்தசாரதி வசித்து வந்த வீடு ஆகியவற்றில் தீ அதிகமாக இருந்த நிலையில், தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து அங்கிருந்த புகையை வெளியேற்றி தனலட்சுமி, பார்த்தசாரதி மற்றும் அருண்குமாரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தனலட்சுமி மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. அருண்குமாருக்கு தீக்காயங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாமக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தனலட்சுமி வீட்டில் கேஸ் கசிவை சரி செய்ய அருண்குமார் கூர்மையான பொருளை வைத்து கேஸை வெளியேற்றி உள்ளார். அப்போது வீடு முழுவதும் கேஸ் பரவி உள்ளது. இதனால் வீட்டில் இருந்த விளக்கின் மூலம் தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அருண்குமார் உடனடியாக அங்கிருந்து வெளியேறி உள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் இருந்த தனலட்சுமி அருகில் இருந்த பார்த்தசாரதியின் வீட்டினுள் நுழைந்தார். அப்போது வீட்டில் இருந்த பார்த்தசாரதி வீட்டை வெளியேற முடியாமல் சமையல் அறைக்குள் புகுந்தார். குறுகலான பகுதியில் வீடு அமைந்ததாலும் தனலட்சுமி உடல் தீப்பற்றி எரிந்ததாலும் புகை முழுவதும் பார்த்தசாரதியின் வீட்டினுள் பரவியது. இதனால் மூச்சு விட சிரமப்பட்ட பார்த்தசாரதி மயக்கமடைந்தது தெரியவந்தது.

சிலிண்டர் கசிவை சரி செய்ய வந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.‌

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com