நாய் கடித்து காயமடைந்த பூனை: கேரளாவில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய கல்லூரி மாணவி
அறுவை சிகிச்சைக்காக பூனையை அண்டை மாநிலத்துக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்த கல்லூரி மாணவியின் மனிதாபமான செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ரமணாநகர் பகுதியில் வசிக்கும் ராஜன் வசந்தா தம்பதியரின் மகள் ஜென்சி. இவர் மூன்றாம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார்.
இந்நிலையில் ஜென்ஸி தனது வீட்டில் வளர்த்து வந்த பூனையை, நாய் கடித்துள்ளது. இதில், காயமடைந்த பூனையை ஜென்ஸி பொள்ளாச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். அப்போது மருத்துவர் ஊசி செலுத்தி சில மருந்துகள் கொடுத்த நிலையில், நான்கு நாட்கள் கடந்தும் பூனை நடக்காததைக் கண்ட ஜென்ஸி வேறு மருத்துவரிடம் எடுத்துச் சென்றார்.
அப்போது அந்த மருத்துவர் இதற்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தி பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரை செய்தார். அங்கு பூனையை பரிசோதித்த மருத்துவர்கள் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறினர்.
அதைத்தொடர்ந்து மருத்துவர்கள் பூனைக்கு மயக்க மருந்து செலுத்தி எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்து அனுப்பி வைத்தனர். மாணவியின் இந்த மனிதாபிமான செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

