தொடரும் சாதிக் கொடுமை: வேட்டியை மடித்து கட்டியதால் அரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்..!
சமூகத்தில் அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டிருக்கும் இதே நேரத்தில்தான், வேட்டியை மடித்துக்கட்டிய காரணத்திற்காக, நான்கு இளைஞர்களின் சாதி குறித்து பேசி இழிவுபடுத்திய சம்பவம் நடந்தேறியுள்ளது. அவர்களை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியும்கூட காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் பக்கத்து ஊரான வலையப்பட்டியில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளனர். அந்த நேரத்தில், மாற்று சாதியினர் இவர்களை தாழ்த்தப்பட்ட இனத்தவர் என்று கூறி இகழ்ந்து பேசியுள்ளனர். மேலும் மணிகண்டன் என்ற இளைஞர் வேட்டியை மடித்து கட்டி இருந்ததற்கு கடுமையாக வசைபாடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த பிரச்னை குறித்து பேசுவதற்கு மறுநாள் இளைஞர்களை அழைத்தவர்கள், அவர்களை அரை நிர்வாணப்படுத்தியும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சாதியினருக்கு இணக்கமாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த தங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக கூறும் மக்கள், காவல்துறை நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சாதியைக்கூறி தாக்கியவர்கள் மீது சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.