என்று தணியும் சாதி தீ?: ஆதிக்க மனோபாவத்தால் அரங்கேற்றப்படும் கொடுமைகள்
காந்தி, பெரியார், காமராஜர் என எத்தனை எத்தனை தலைவர்கள் வந்தாலும் தீண்டாமை கொடுமைகளை இன்றளவும் பேச வேண்டிய சூழ்நிலையை சமூகம் உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. நாமக்கல் அருகே ஒரு சாதியினர் வாழும் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றதற்காக தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞரும் அவரது குடும்பத்தினரும் தாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையை அடுத்த மின்னாம்பள்ளி ஊராட்சியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான மணிவண்ணனின் மகன் தீரஜ் குமார். இவர் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் இருந்த பகுதி வழியே இருசக்கர வாகனத்தில் கடந்து சென்றார். அவரின் சாதாரணமான இந்த செயலே அவரும், அவரது குடும்பத்தினரும் தாக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. ஒரு சாதியினர் வாழும் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்றதை குற்றமாகக் கூறி அந்த இளைஞரின் வீட்டுக்குள் புகுந்த ஒரு பிரிவினர் சரமாரியாக அவரை தாக்கியதோடு வீட்டையும் அடித்து உடைத்தனர்.
இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் இருநாட்கள் தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரையும் வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். இதேபோல காலம் காலமாக தாங்கள் சாதிக்கொடுமையால் துன்பங்களை அனுபவித்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.
இச்சம்பவம் தொடர்பாக சாதி வன்கொடுமை தடுப்புப்பிரிவு உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஒரு பெண் உட்பட 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆதிக்க மனோபாவமும், நலிவுற்றவர்கள் மீதான அடக்குமுறையும், இன்னும் அடங்காத தீயாக மனங்களில் கனன்று கொண்டிருக்கும் வரை சாதிக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது என்பதே வேதனையான உண்மை.