’பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

பெண்களுக்கு எதிராக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
h raja
h rajapt web

கடந்த 2018 ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக, வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

அவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணக்கு வந்தபோது, எச்.ராஜா தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சிபால் கனகராஜ் ஆஜராகி, அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவி வழி செய்திதான் என்றும், ஆதாரம் ஏதும் இல்லை என வாதிட்டார். பெரியார் சிலை உடைக்க வேண்டும் என்று டிவிட்டர் போட்டார் என்பதற்கும் ஆதாரம் சேகரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி, எச்.ராஜா மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பாபு முத்துமீரான் ஆஜராகி, அவருடைய பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்க கூடிய வகையில் உள்ளது என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். எனவே வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இவ்வாறு எச்.ராஜா பேசுவது முதல் முறை அல்ல என்றும், இதுபோல் கருத்துகளை கூறக்கூடாது என்றும் தெரிவித்ததுடன், பெண்களை குறி வைத்து குற்றச்சாட்டுகளை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிராக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதையும் குறிப்பிட்டார். பின்னர் எச்.ராஜாவின் மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com