கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிக் கொலை | குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு மரண தண்டனை!
சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷும் காதலித்தாகச் சொல்லப்பட்டது. இதற்கு சத்யபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், சதீஷுடன் பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாகக் கூறப்பட்டது. இதனால் சதீஷ் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதற்காக சத்யபிரியா பரங்கிமலை ரயில் நிலையம் சென்றார். அங்கே, சத்யபிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிரவலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்குப்பதிந்த போலீஸார், சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி பரிந்துரையின் அடிப்படையில் சதீஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யும்படி நவம்பர் 4ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். தன் மீது பதியபட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சதீஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு காவல்துறை தரப்பில் போதிய விளக்கம் தராத நிலையில், சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்த நிலையில், இதுதொடர்பான வழக்கு மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி இந்த வழக்கில் சதீஷ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது தண்டனை விவரங்கள் இன்று (டிச.30) வெளியாகும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், அதன் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், கல்லூரி மாணவி கொலை வழக்கில் ரயிலில் தள்ளி கொலை செய்த சதீஷுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.
மாணவியைப் பின்தொடர்ந்து தொல்லை அளித்த பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டு சிறைத் தண்டனை முடிந்த பிறகு, கொலை வழக்கின் கீழ் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.