திருச்சி சிவா மருமகன் மீது வழக்கு! கைதுக்கு மும்முரம்? முற்றுகிறதா K.N.நேரு - திருச்சி சிவா மோதல்?
திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆவின் பால் மற்றும் பொருள்கள் விற்பனை நிலையம் உள்ளது. அங்கு கடந்த 3ஆம் தேதி விஜயசாரதி என்பவர் இருசக்கர வாகனத்தை திருடியதாகவும், அவரை கராத்தே முத்துக்குமார் (திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர், மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா-வின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது) என்பவர் கொடூரமாக தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விஜயசாரதியின் மனைவி செல்வி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கராத்தே முத்துக்குமார் என்பவர் உட்பட 4 பேர் மீது 147,148, 342, 323, 324, 365, 506/2 ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்கு (கொலை முயற்சி, தாக்குதல் ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, (Tvs 50) மோட்டார் வாகனத்தை திருடியதாக, விஜயசாரதி மீது இந்திய குற்றவியல் சட்டம் 379 வது பிரிவின் கிழ் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே காவல்துறையினர் முத்துக்குமாரை கைது செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமறைவாக அவர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பாக திருச்சி சிவாவின் மகளும் கராத்தே முத்துக்குமாரின் மனைவியுமான காயத்ரி, “நாங்கள் நடத்தும் பால் விற்பனை நிலையத்தின் பின்புறம் இருசக்கர வாகனத்தை (டிவிஎஸ் 50) கவனக்குறைவாக சாவியுடன் நிறுத்தி விட்டோம். அதனை ஒருவர் எடுத்துச் சென்று விட்டார். அவரை கையும் களவுமாக பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தோம். எங்கள் மீது போலீசார் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருடனைப் பிடித்துக் கொடுத்தது தவறா?
இதே காவல் நிலையத்தில், எனது தந்தையின் (திருச்சி சிவா எம்பி) வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது கூட, இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இப்போது எங்கள் மீது உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. நாங்கள் யாரும் தலைமறைவாக இல்லை. அனைவரும் வீட்டில் தான் இருக்கிறோம்” என்று சொல்கிறார்.

‘போலீசாரால் தேடப்படும் குற்றவாளி! தலைமறைவாக உள்ள குற்றவாளி!’ என சொல்லப்படும் கராத்தே முத்துக்குமார் நம்மிடையே கூறியபோது “இது புனையப்பட்ட பொய் வழக்கு. உட்கட்சி பூசல் காரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. விஜயசாரதி என்ற ஒரு திருடன். அவர் ரூ. 3 ஆயிரம் மதிப்புடைய ஒரு டிவிஎஸ் 50 வாகனத்தை திருடினார். அவர் திருடியதை சிசிடிவியில் பார்த்து, அவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் அவரை ஒப்படைக்க நான் காவல்நிலையம் சென்றேன். இச்சம்பவம் கடந்த 3 ஆம் தேதி நடந்தது.
அப்போது அவரை திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அதில் விஜயசாரதியை பொதுமக்கள் ஒப்படைத்ததாக பதியப்பட்டுள்ளது. பின்னர் கடந்த 13 ஆம் தேதி என் மீதும், என்னுடன் இருப்பவர்கள் மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், எங்களை கைது செய்யக் கூடாது என முன்ஜாமீன் கோரியுள்ளோம். நேற்று முன்ஜாமீன் மீதான நீதிமன்ற விசாரணையின் போது, விஜயசாரதி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் இருப்பதாக போலீசார் பொய்யான தகவலை பதிவு செய்துள்ளனர்.

அவர் அரசு மருத்துவமனையில் இருந்து கடந்த 15 ஆம் தேதியே வெளியே சென்றுவிட்டார். நீதிமன்றத்தில் காவல்துறையினர் பொய்யான தகவலை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இது உள்நோக்கம் கொண்டதில்லையா? திருச்சி சிவா ஒரு நேர்மையான அரசியல்வாதி. அவருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் என்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறையினர் எதையும் தெரியாமல் செய்யவில்லை. தெரிந்துதான் செய்கிறார்கள்.
திருச்சி சிவாவின் வீடு தாக்கப்பட்டபோதும், காவல் நிலையத்தில் பெண் காவலர் தாக்கப்பட்ட போதும், உரிய வழக்குகளை பதிவு செய்யாமல் நீதிமன்ற கண்டனத்துக்குள்ளான காவல் நிலையம் அது. அங்கு எங்கள் மீது பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் (போலீசார்) யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்? எந்த முகாந்திரமும் இல்லாத ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறோம், ஒதுக்கப்படுகிறோம். நான் திமுகவில் உறுப்பினராக சேர முயற்சித்த போது கூட எங்களை மாவட்ட செயலாளர் (அமைச்சர் கே.என்.நேரு) அனுமதிக்கவில்லை. ஆன்லைன் மூலமாகதான் திமுகவில் உறுப்பினராக சேர்ந்தோம்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

முத்துக்குமார் பிணை கேட்டு மதுரை உயர் நீதிமன்றத்திற்கு சென்றபோது அந்த வழக்கு விசாரணையை வருகிற இரண்டாம் (02.06.2023) தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். ‘இந்த பிணை வழக்கு அவ்வளவு அவசர வழக்கு அல்ல. தற்போது உள்ள விடுமுறை கால நீதிமன்றம் இவ்வழக்கை எடுத்து விசாரிக்க முடியாது’ என நீதிபதி தெரிவித்துள்ளார். இதனிடையே அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி சிவா எம்பி. இடையே மோதல் முற்றுவதாக தெரிகிறது.