நெல்லை பள்ளி விபத்து - தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

நெல்லை பள்ளி விபத்து - தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு
நெல்லை பள்ளி விபத்து - தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

நெல்லை சாஃப்டர் பள்ளி கழிவறை கட்டடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்போது மாணவர்கள் நேரடியாக சென்று கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வழக்கம்போல மாணவர்கள் பள்ளிக்கு சென்றபோது காலை 11 மணியளவில் இடைவேளை நேரம் வந்தது. அப்போது மாணவர்கள் கழிவறைக்கு செல்லத் தொடங்கினர். அப்போது திடீரென கழிவறையின் தடுப்புச் சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்தது. இதைப்பார்த்த சக மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவ்விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 4 மாணவர்கள் காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com