விடுதி உரிமையாளரிடம் தகாத பேச்சு : எம்.பி கணவர் மீது வழக்குப் பதிவு
கோபிசெட்டிப்பாளையத்தில் விடுதி பெண் உரிமையாளரிடம் ஆபாசமாக பேசியதாக முன்னாள் எம்.பி.யின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சத்தியபாமாவின் கணவர் வாசு என்பவர், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தங்கும் விடுதி நடத்திவரும் நிர்மலா என்ற பெண்ணிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, உல்லாசமாக பொழுதைக் கழிக்க ஒரு பெண்ணின் துணை தேவைப்படுவதாகவும், அதற்கு ஏற்பாடு செய்யுமாறும் கூறியுள்ளார்.
இந்த உரையாடலை பதிவு செய்த கொண்ட நிர்மலா, இது தொடர்பான புகாரை ஏற்க கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தினர் மறுப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், சத்தியபாமாவின் கணவர் வாசு மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுதியின் உரிமையாளர் நிர்மலாவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் விசாரணை நடத்தினார். முன்னாள் எம்.பி. சத்தியபாமாவும், வாசுவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

