மாணவர்களுக்கு வழங்கப்பட்ட போலி சான்றிதழ்கள் - 3 அதிகாரிகள் மீது வழக்கு
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநரகத்தில் 500 மாணவர்களுக்கு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியதாக 3 அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்திருக்கிறார். அதில், ஒரே பதிவெண் கொண்ட இரண்டு சான்றிதழ்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், 2014ஆம் ஆண்டு முதல் சுமார் 500 மாணவர்களிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கியது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில், காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர தேர்வுத்துறை கூடுதல் கட்டுப்பாட்டாளர் ராஜராஜன், கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் கணினி கட்டுப்பாட்டாளர் கார்த்திகை செல்வன் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஓரிரு நாளில் அந்த 3 பேரிடமும் விசாரணை தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.