விஜய் மீது வழக்குப் பதிவு.. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார்!
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதன்முறையாக களமிறங்கி பெரம்பூர், கொளத்தூர் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். திமுகவை கடுமையாக விமர்சித்த நிலையில், கொளத்தூரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்து, நிலை கண்காணிப்பு குழு புகாரின் பேரில் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 5.73 கோடி வாக்களர்கள் வாக்களிக்கவிருக்கும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
இந்தநிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். தொடர்ந்து பெரம்பூர், மற்றும் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுகவை விமர்சித்து மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.
மேலும் வில்லிவாக்கம் தொகுதியிலும் பரப்புரை செய்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி அவருடைய பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி விஜய் பிரச்சாரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் மீது வழக்குப்பதிவு..
சென்னை கொளத்தூரில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரப்புரை செய்ததாக தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் கொடுத்த விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது புகார் எழுந்த நிலையில், நிலை கண்காணிப்பு குழு அதிகாரி குமார் அளித்த புகாரில் விஜய் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும், ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மறைத்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

