இளைஞர் மீது கொடூர தாக்குதல்: தஞ்சையில் 6 பேர் மீது SC/ST சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு
பணம் திருடியதாககூறி பட்டியலின கூலி தொழிலாளியின் கண்களை துணியால் கட்டி வைத்து அடித்த நபர்கள் மீது கொலைமுயற்சி மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பூண்டி மேலத் தெருவில் வசித்து வரும் குணசேகரன் என்பவரது மகன் ராகுல் வயது (22). பட்டியலின வகுப்பைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான இவர், அதே வகுப்பைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது வீட்டில் பணம் திருடியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து லட்சுமணனும் அவருடன் இணைந்த 5 பேரும் ராகுலின் கண்களை கட்டி, மரத்தில் கட்டிவைத்து பிரம்பால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் துடித்த ராகுல் மயக்கம் அடைந்து அதே இடத்திலேயே விழுந்துள்ளார். இருப்பினும் ஆத்திரம் தீராத அந்த கும்பல் மயக்கநிலையில் இருந்த ராகுலை மேலும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இந்த காட்சியை அந்த கும்பலில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அம்மாப்பேட்டை காவல்துறையினர் இது தொடர்பாக லட்சுமணன், விக்னேஸ்வரன்,விவேக்,பார்த்திபன், சரத், ஐயப்பன் ஆகியோர் மீது கொலைமுயற்சி மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடித்ததில் படு காயமடைந்த கூலி தொழிலாளி வலி பொறுக்க முடியாமல் எலி மருந்து உட்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்